12.12.2015

நுழைவாயில் (அறிமுகம்)



கவிதை என்றால் என்ன?

இது கொஞ்சம் சிக்கலான கேள்வி! ஒவ்வொருவரும் ஒரு விடை சொல்லலாம், எல்லாமே சரிதான்!
அதுதான் கவிதை!

ஆனால், கவிதை அமைப்பிற்கான இலக்கணம் என்று ஒன்று உள்ளது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டது! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பல வளர்ச்சியும் பரிணாமும் கண்டுவிட்டது. இதுதான் தமிழின் ‘யாப்பிலக்கணம்’.

இதைக் கற்பதனால் என்ன பயன்?

அது உங்களைப் பொறுத்தது!
கவிதை எழுதலாம், வெண்பா, விருத்தம்…
ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளை மேலும் நுட்பமாய் ஆழமாய் இரசிக்கலாம்…
மொழி ஆளுமையை வளர்த்துக் கொள்ளலாம்…
எதுவானாலும், புதிதாய் ஒன்றைக் கற்பது நல்ல விஷயம்தானே?

பொதுவாக தமிழ் இலக்கணம் பற்றிய ஒரு குட்டி அறிமுகத்தோடு தொடங்குவோமா?

தமிழ் இலக்கணம் தொல்காப்பியத்தில் இருந்து ஆரம்பமாகிறது (நமக்கு கிடைத்தவரையில் இதுதான் பழைய நூல்!) தொல்காப்பியர் ‘எழுத்து’ ‘சொல்’ ‘பொருள்’ என்று மூன்று நிலையில் இலக்கணத்தை அலசுகிறார்.

எழுத்து’ என்பது மொழியின் ‘ஒலிகள்’. 
உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் இப்படி; இவற்றின் தன்மை, கால அளவு, உச்சரிப்பு, எது எது எந்தெந்த கூட்டணியில் வரும், எப்படிப் புணரும் இதைப் பற்றியெல்லாம் அலசுவது ‘எழுத்திலக்கணம்’. (கிட்டத்தட்ட “Phonology”)

எழுத்துக்கள் சேர்ந்து ‘சொல்’ ஆகும். இந்தச் சொற்களின் வகை (பெயர், வினை, இடை, உரி – நான்கு!) அவற்றின் உருவாக்கம், பண்பு, பயன்பாடு இப்படி அலசுவது ’சொல்லிலக்கணம்’ (ஏறத்தாழ “Morphology”)

சொற்கள் சேர்ந்து பாடலாகவோ, வாக்கியமாகவோ ‘பொருள்’ தரும். இதை அலசுவது ‘பொருளிலக்கணம்’.

ஆனால், பொருளிலக்கணம் என்பது சிறப்பாக ‘பாடு பொருள்’ பற்றிய இலக்கணம். பாடலில் எதைப் பற்றி சொல்வது, அதை எப்படிச் சொல்வது என்று அலசுவது. இப்படி ஒரு அலசல், இந்தளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் தமிழில் மட்டுமே உள்ளது!

பொருளிலக்கணம் தமிழுக்கே உரிய சிறப்பு இலக்கணம்.
பொருள் ’அகப்பொருள்’ (காதல், திருமணம்) ’புறப்பொருள்’ (வீரம், கொடை, பண்பு) என்று இரண்டு நிலையில் அலசப்படும். இதைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பேசலாம்!

தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரத்தில் ஒரு பகுதியாக அலசப்பட்ட இரண்டு விஷயம் ‘யாப்பு’ & ‘அணி’. தொல்காப்பியருக்குப் பின் வந்த காலத்தில் இவை நன்றாக விரிவடைந்து தனித்தனி இலக்கணங்களாக வடிவெடுத்துவிட்டன.

யாப்பிலக்கணம்’ கவிதை/பாடல்/செய்யுளின் கட்டமைப்பைப் பற்றி அலசுவது. ஓசைநயம், சொல்நயம் எது எப்படி இருந்தால் என்ன பாட்டு என்றெல்லாம் அலசும். இதைத்தான் நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

அணியிலக்கணம்’ என்பது பாடலில் அமையும் அழகு நலன்கள் (aesthetics) பற்றி அலசுவது. இதையும் கொஞ்சம் விரிவாக கடைசியில் பேசலாம்.

ஆக, தொல்காப்பியர் காலத்தில் மூன்றாக இருந்த தமிழ் இலக்கணவகை அவருக்குப் பின்னால் ’ஐந்து’ என்று வளர்ந்தது. இதுதான் தமிழின் ஐந்திலக்கணம் – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.

இலக்கணம் என்பது மாறிக்கொண்டே இருப்பது. 
மொழி வளர வளர இதுவும் மாறும். எனவேதான் தொல்காப்பியருக்குப் பின்னும் பலப்பல இலக்கண நூல்கள் தோன்றின. இலக்கணத்தின் வளர்ச்சி காரணமாய் பின் வந்த பல நூல்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கணத்தை மட்டுமே அலசின. தொல்காப்பியத்தைப் போல ஐந்து இலக்கணத்தையும் அலசும் நூல்கள் மிகக் குறைவு. நான் எனக்குத் தெரிந்த அளவில் முக்கியமான இலக்கண நூல்களைக் கீழே குறிப்பிடுகிறேன், இயன்றவரை இவற்றைப் படித்துப் பார்க்கவும்:


  • <நூல் பெயர்> (<ஆசிரியர் பெயர்>, <காலம்>) - <அலசும் இலக்கணம்>
  • தொல்காப்பியம் (தொல்காப்பியர், ~கி.மு. 500) – எழுத்து, சொல், பொருள் (யாப்பு, அணி)
  • நன்னூல் (பவணந்தி முனிவர், ~கி.பி.1300) – எழுத்து, சொல்
  • புறப்பொருள் வெண்பாமாலை (ஐயனாரிதனார், ~கி.பி.900) – புறப்பொருள்
  • நம்பியகப்பொருள் (நாற்கவிராச நம்பி, ~கி.பி.1300) – அகப்பொருள்
  • யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை (அமுதசாகரர், ~கி.பி.1100) – யாப்பு
  • தண்டியலங்காரம் (தண்டி, ~கி.பி.1000) – அணி


யாப்பிலக்கணம்:

இதைத்தான் 15 முதல் 20 பாடங்களுக்குள் நாம் விவரமாக கற்கப் போகிறோம். என்றாலும் ஒரு பருந்து பார்வையாய் இதனைக் கொஞ்சம் விவரித்துவிடுகிறேன்…

யாப்பு’ என்றால் ‘கட்டுதல்’ என்று பொருள். ‘யாக்கை’ என்பது உடம்பு (பலவித மூலக்கூறுகளால் ‘கட்ட’ப்பட்டது!) செய்யப்படுவது செய்யுள். பாடல், கவிதை எல்லாம் இதுதான்.

செய்யுளின் உறுப்புகள் என்ன? எவற்றினால் அது கட்ட/கட்டமைக்கப்படுகிறது என்பதே யாப்பிலக்கணத்தின் அடிப்படை கேள்வி. இதற்கு விடையாக நம் முன்னோர் ஆறு விஷயங்களைக் கண்டறிந்துள்ளனர் (அவை ‘எழுத்து’, ‘அசை’, ‘சீர்’, ’தளை’, ‘அடி’, ‘தொடை’)

இவற்றின் வகை என்னென்ன, எதை எப்படி சேர்த்தால் (யாத்தால்) எந்த மாதிரியான ஓசை நயமும், தொனியும் வரும் என்று அலசி இது இது இந்த ’பா’ (அல்லது ‘பாவினம்’) என்று வகைபடுத்தியுள்ளனர்.

பா’ என்பது அடிப்படையான அமைப்பு. நான்கு வகை உள்ளது: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.

பாவினம்’ என்பது ஒரு ‘பா’வைச் சேர்ந்த, அதனோடு தொடர்புடைய அமைப்பை உடையது; மூன்று வகை: தாழிசை, துறை, விருத்தம் 
(நான்கு பாவகைக்கும் இம்மூன்று வகை பாவினமும் உண்டு, எனவே மொத்தம் 4 x 3 = 12 பாவினம் ஆகும்!)

ஓரளவு ஓசை அமைப்போடு எழுதப்படும் எந்தப் பாட்டையும் இந்த வகைகள் ஏதோ ஒன்றினுக்குள் அடக்கிவிடலாம்.

மேலே கடைசியாகச் சொன்னதில் இரண்டு குறிப்புகள் உள்ளன:
  1. இலக்கணப்படி பாட்டெழுதுதல் எளிது,
  2. எழுதப்பட்ட பாட்டிற்கேற்பவே இலக்கணம்!

நல்ல கவிதைக்கு அடிப்படை ‘ஓசை’தான் (ஒரு ‘rhythm’ அல்லது ‘pattern’) அது இல்லையேல் அது வெறும் வாக்கியம்தான் (என்னதான் மடக்கி மடக்கி எழுதினாலும் செல்லாது!)

சரி, தயாராகுங்கள்… கவிதை இலக்கணம் கற்போம்!

4 கருத்துகள்:

  1. உங்கள் தளம் கண்டு பெருமகிழ்வுற்றேன் !!

    தங்கள் தமிழ் பயணம்(பணி) நில்லாது தொடரட்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி குப்பையாரே (’குப்பை’ = குவியல், பல விதயங்கள் தங்களிடம் மண்டியிருக்கிறது என்பதைக் குறிக்கிறது :-) )

      வாசிப்பவரின் பின்னூட்டமும், பங்களிப்பும்தான் எழுதுபவனுக்கு ஆதாரம், ஆகாரம்... தொடர்ந்து பங்களியுங்கள், நன்றி...

      நீக்கு
  2. Nalla pathivu,yappilakkanam patri en thamil asiriyare arinthirukkavillai.ithu manavarkalukku nichchayam uthavidum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி... எனது விளக்கம் எவ்வளவு தொலைவு புரிகிறது, எங்கெல்லாம் புரியவில்லை என்று குறிப்பிட்டுக் கருத்துரைக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன், அது இன்னும் எளிதாக சிறப்பாக கற்போருக்குக் கற்பிக்க உதவும்...

      நீக்கு